பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் - ரூ.100 கோடி ஒதுக்கீடு
2025 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் உற்பத்திக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 100 கோடி அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பண்டிகையின்போது, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது.
இந்த நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறுவதை முன்னிட்டு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்குத் தேவைப்படும் வேட்டி சேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்து வழங்கிட ஏதுவாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்பணமாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 100 கோடி ரூபாய் அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் 2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஏறத்தாழ 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதே போல ஏறத்தாழ 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.