நாம் பிறக்கும்போதே உடையுடன் பிறக்கவில்லை; பழங்குடியினரின் உடையை கேவலமாக பார்ப்பது வெட்கக்கேடானது- ஆளுநர் ரவி
பழங்குடியின மக்களை ஓட்டு வங்கி அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினர், பிரதமர் மோடி வந்த பிறகு தான் அந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
பழங்குடியினர் பெருமை நாள் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் உருவான தினம் குறித்த நிகழ்ச்சி சென்னை ஆளுநர் மாலையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ரவி, “நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்கு பின்னரும் பழங்குடியினர் மிகவும் பின்தங்கியுள்ளது வேதனை அளிக்கிறது. நாட்டில் 10 கோடி பழங்குடியின மக்கள் உள்ளனர் அவர்கள் வளர்சியில் பின்தங்கியுள்ளதை ஏற்கமுடியவில்லை. நாடு வளர்கின்ற போது பழங்குடியினர் முன்னேறாமல் உள்ளனர். மோடி வந்த பின்னர் தான் வாக்கு வங்கிக்காக மட்டும் பழங்குடியினரை பார்க்கும் பார்வை மாறியுள்ளது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் பழங்குடியினரை கண்டுகொள்ளவில்ல
நம் மாநிலத்தில் கூட பழங்குடியினர் குறித்த முழு ஆதரங்கள் இல்லை. யாருக்கும் ஆதார் அட்டை இல்லை,எந்த அடையாளமும் இல்லை. நாடு வளர வேண்டும் என்றால் அனைவரும் ஒரே குடும்பம்,அனைவருக்கும் ஒரே உரிமை என்ற அமைப்பில் உயர்வதுதான் சரியானதாக இருக்கும். மோடி வந்த பின்னர் கல்வி,சுகாதாரம் என பழங்குடியினரையும் உள்ளடக்கி பாகுபாடில்லாமல் செல்கிறது. பிர்சா முண்டாவை பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பிர்சா முண்டாவின் தியாகம் ஆவணமாக்கப்படவில்லை. பிர்சா முண்டா நாட்டிற்காக போராடினார், அவர் பழங்குடியினருக்காக மட்டும் போராடிய தலைவராக கருதக்கூடாது. சாலை, போன்ற வசதிகள் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் இல்லாமல் உள்ளது, இது ஏற்கதக்கதல்ல.
பழங்குடியினர் மீதான மக்கள் பார்வை மாற வேண்டும், பிறக்கும்போதே நாம் உடையுடன் பிறக்கவில்லை,பழங்குடியினரின் உடையை வைத்து அவர்களை கேவலமாக பார்க்கும் பார்வை இருப்பது வெட்ககேடானது. வேகமாக மாறிவரும் காலமாற்றத்திற்கு ஏற்ப பழங்குடிகளும் உடனடியாக மாற வேண்டும் என்று எண்ணுவது தவறு. அதற்கு பதிலாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும். வங்கிகணக்கு துவங்குவது,ஆதார் வழங்குவது உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும்.ஒரு பழங்குடி சமூக பெண் குடியரசு தலைவராக இருப்பது மட்டும் போதாது. சமூகத்தில் அனைத்து துறைகளிலும் அவர்கள் பங்களிப்பு இருக்கும் வகையிலான உதவிகள் சென்று சேர வேண்டும்” என்றார்.