பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து- 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி
புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சென்ற அரசு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் அருகே உள்ள நகரத்துப்பட்டியில் திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையிலிருந்து திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா தனது அரசு காரில் சென்றுள்ளார். அந்த அரசு வாகனத்தை அவரது அரசு ஓட்டுநர் காமராஜ் ஓட்டி சென்றபோது ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த நபர்கள் திடீரென பின்னோக்கி திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த வருவாய் கோட்டாட்சியரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் அருகே உள்ள பள்ளத்திற்கு தூக்கி வீசப்பட்டது. மேலும் புதுக்கோட்டையிலிருந்து திருமயம் நோக்கி சென்ற வருவாய் கோட்டாட்சியர் வாகனம் விபத்துக்குள்ளானதில் புதுக்கோட்டை சாலை நோக்கி திரும்பி நின்றது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் கிராமத்தைச் சேர்ந்த பைசல், ஃபயாஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் வருவாய் கோட்டாட்சியரின் வாகன ஓட்டுனர் காமராஜுக்கு கையில் காயம் ஏற்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து விபத்தில் இறந்த இரண்டு நபர்களின் உடல்களும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து காரணமாக திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்துக்கு குறித்து நமணசமுத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.