புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு- நாளை காலை வரை கடற்கரை செல்லும் அனைத்து சாலைகளும் மூடல்
புதுச்சேரியில் இன்று மதியம் 2 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை ஒயிட் டவுண் பகுதிகயில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
புதுச்சேரி போக்குவரத்து எஸ்பி செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நாளை (டிச31) நள்ளிரவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நாளை மதியம் 2 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை ஒயிட் டவுன் பகுதிகயில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. ஆம்பூர் சாலையிலிருந்து கிழக்கு நோக்கி கடற்கரை செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடப்படும். கடற்கரைச்சாலையை ஒட்டிய ஒயிட் டவுன் பகுதியில் அமைந்துள்ள தேவாலயங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் , அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் , அங்கு வசிக்கும் மக்கள் ஆகியோருக்கு நான்கு வித வெவ்வேறு வண்ணம் கொண்ட வாகன நுழைவு அடையாள அட்டைகள் தரப்படும். போக்குவரத்து எஸ்பி அலுவலகத்தில் ஆதார் கார்டு, இருப்பிட சான்று, விடுதி மற்றும் உணவகங்கள் வர்த்தக உரிமை நகல்களை ஆவணங்களாக சமர்பித்து அட்டைகள் பெறலாம்.
புதுச்சேரி கடற்கரைக்கு புத்தாண்டு கொண்டாட வருவோர் உப்பளம் புதிய துறைமுகம், இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம், உப்பளம் பெத்தி செமினார் பள்ளி , பாண்டி மெரினா, பழைய பஸ் நிலைய நகராட்சி வளாகம், நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகம், புதிய பஸ் நிலையம், பாரதிதாசன் மகளிர் கல்லூரி, வாசவி பள்ளி, பாத்திமா மேனிலைப்பள்ளியில் வாகனங்களை நிறுத்தலாம். இங்கிருந்து கடற்கரை வர 30 இலவச பஸ் வசதி பிஆர்டிசி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூர்சாலை மற்றும் மிஷன் வீதிக்கு இடையில் உள்ள அனைத்து சாலைகள், தெருக்களிலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். நாளை மதியம் 2 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை புதுச்சேரி நகரப்பகுதியில் கனரக வாகனங்கள் இயக்கவும், சாலையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினர் 600 பேர், என்எஸ்எஸ், என்சிசி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 400 போக்குவரத்து தன்னார்வ தொண்டர்கள் புத்தாண்டு கொண்டாட்ட போக்குவரத்து காவல்துறை ஏற்பாடுகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க திடீர் வாகன சோதனை நடத்தப்படும். பல சந்திப்புகளில் சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்று குறிப்பிடபட்டுள்ளது.