மழை வெள்ள பாதிப்பு : விவசாயிகளுக்கு நிவாரண உதவி அறிவித்தார் முதல்வர்!

 
cm stalin

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூபாய் 300 கோடியை  ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவ மழையினால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கன்னியாகுமரியிலும் , மிக அதிக அளவில் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன. முதல்வர் முக ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து நிவாரண பணிகளை முடக்கி விட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

stalin

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள,  பயிர்கள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தலைமையில் ஆறு அமைச்சர்கள் அடங்கிய குழுவினை அமைத்து தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இக்குழு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு,  பயிர் பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு,  பின்னர் விவசாயிகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

stalin

இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை கார், சொர்ணவாரி பயிர் ஹெக்டேர்  ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும் என்றும்  நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை சாகுபடி செய்திட , ஏதுவாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் விதை நெல்,  நுண்ணூட்ட உரம், யூரியா ஆகிய இடுபொருட்கள்  வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் மழை வெள்ளத்தால்  மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்ய ரூபாய் 300 கோடி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.