இன்றும் ரெட் அலெர்ட்.. 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

 
school

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. தொடக்கமே அதிரடியாக கடந்த இரு தினங்களாகவே வட தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  நேற்று இரவு முதல் மழை சற்று குறைந்திருக்கும் நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு  இன்றும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும்  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

சென்னை மழை

இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல்  கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.