பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணியா?- டிடிவி தினகரனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி
துரை தல்லாகுளத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிருத்ரம் மகா ஹோமத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக சட்டமன்ற துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், “அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் மற்றும் செய்ய தவறிய பணிகளை தீர்மானமாக கொண்டு வந்துள்ளோம், அதிமுக 52 ஆண்டுகளாக மக்களை கட்டிக் காக்கிற இயக்கமாக செயல்பட்டு வருகிறது, தீர்மானங்களை புதிதாக பார்க்கிற அண்ணாமலைக்கு இது புதிய தீர்மானங்களாக தெரியும், ஆனால் மக்களின் உரிமைகள் நலன் சார்ந்தவைகளை தீர்மானமாக கொண்டு வரப்பட்டுள்ளது, தமிழக மக்களின் நலன் சார்ந்த விஷயங்களுக்காக உயிரை பணையம் வைத்து அதிமுக போராடும் என சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்” என்றார்.
பாஜக கூட்டாணிக்கு அதிமுக வர வேண்டும் என்ற டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “டிடிவி தினகரனின் கற்பனை கலைகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது, அதிமுகவை பொறுத்த வரைக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களை தலைவர்களாக 2 கோடி தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். 8 கோடி தமிழர்களும் ஏற்றுக் கொண்ட தலைவராக நான்கரை ஆண்டு கால சிறந்த ஆட்சி செய்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிசாமி கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களின் பிரச்சினைகளுக்காக ஒவ்வொரு நாளும் போராடி வருகிறார். டிடிவி தினகரன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக கற்பனை கதைகளை கூறி வருகிறார். டிடிவி தினகரன் பேசுவதற்கெல்லாம் அதிமுக தொண்டன் கூட பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அதிமுக தொண்டர்கள் செயல்பட்டு வருகிறோம். 8 கோடி தமிழர்களும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வரவேண்டும் என நினைக்கிறார்கள். 8 கோடி தமிழர்களும் வேண்டும். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வேண்டுமென மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிராத்தனையாக உள்ளது. அதை செயல்படுத்த அதிமுக தொண்டர்கள் களத்தில் உழைத்து வருகிறார்கள்” என கூறினார்.