''திடீர் புளியோதரை, திடீர் தயிர் சாதம் போல் திடீர் துணை முதலமைச்சர்..''- ஆர்.பி.உதயகுமார்
திடீர் புளியோதரை, திடீர் சாம்பார் என்பது போல் திடீர் சட்டமன்ற உறுப்பினர், திடீர் அமைச்சர், திடீர் துணை முதலமைச்சர் என்று உருவாக்கி வருவது எந்த மரபு என்பது தெரியவில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கப்பலூர் சுங்கச்சாவடி விதியை மீறி புறம்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள், இதே எடப்பாடியார் ஆட்சியில் உள்ளூர் மக்களுக்கு முழு கட்டணவிலக்கு அளிக்கப்பட்டது. தற்பொழுது மக்கள் அதைத்தான் கேட்கிறார்கள் புதிய சலுகை எதுவும் கேட்கவில்லை. தற்பொழுது தமிழகத்தில் 67 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதன் மூலம் ஒரு பகல் கொள்ளையை அரசு செய்து வருகிறது, தற்போது காலாவதியான சுங்கச்சாவடிவுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது,
பொதுவாக இது போன்ற சுங்கச்சாவடி அமைக்கும் முன்பு அந்த சாலைகள் அமைக்கும் செலவுகளை ஈடுகெட்ட வசூல் செய்வார்கள் அதன் மதிப்பு முடிந்த பின்பு டோல்கேட்டை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இதற்கு எந்தக் குரல் கொடுக்காமல் மாநில அரசு இதை வேடிக்கை பார்க்கின்றது. மேலும் சுங்கச்சாவடிகளில் 17 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். மேலும் புதிய மூன்று சுங்கச்சாவடியை ஏற்படுத்தி விட்டனர். ஏற்கனவே விதியை மீறி ஆறு கிலோமீட்டருக்குள் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி அகற்ற வேண்டும் என்பதை நாட்டுமக்கள் கொந்தளிப்போடு இருந்து வருகிறார்கள். இதை மத்திய,மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், அதே போல் 17 சகவீத கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆனால் மத்திய, மாநில அரசுகள் ஒருவருக்கு ஓருவர் மீது குற்றம் சுமத்த கூடாது, இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மக்கள் பிரச்சினையை தீர்க்க அரசுக்கு நேரமில்லை,ஆனால் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கவனத்தில் தான் உள்ளனர். இன்றைக்கோ, நாளைக்கோ அறிவிப்பு வந்துவிடும் என்று தொடர் நாடகத்தை அரசு அரங்கேற்று வருகிறார்கள். உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கினால் தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஒடப்போகிறது, தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை. அதனால் ரத்த ஆறு தான் ஓடும். உதயநிதியை துணை முதலமைச்சரானால் நீட்தேர்வை ரத்து செய்து விடுவாரா? எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கலை காட்டியவர் நிதியை கொண்டு வந்து விடுவாரா? கட்சித்தீவு நமது பிறப்புரிமை உதயநிதி கச்ச தீவை மீட்டுவிடுவரா? இல்லை மின்சார வரி, குப்பை வரி, சொத்து வரி இவற்றையெல்லாம் குறைத்து விடுவாரா? தற்போது வெளிநாட்டு முதலீட்டை பெற்று விட்டோம் என்று முதலமைச்சர் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் சட்ட ஒழுங்கு சந்து சிரிக்கிறது. எப்படி வெளிநாடு முதலீடு தமிழகத்திற்கு வரும்? வெளிநாட்டு முதலீட்டிற்கு வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று கூறினோம். அது மரபு இல்லை என்று முதலமைச்சர் பதில் கூறுகிறார். திடீர் புளியோதரை, திடீர் தயிர்சாதம் மாதிரி திடீர் சட்டமன்ற உறுப்பினர், திடீர் அமைச்சர், திடீர் துணை முதலமைச்சர் என்று உருவாக்கியது இது எந்த மரபு என்று தெரியவில்லை. அதேபோல் ஏழை,எளிய குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டை தற்பொழுது கடைகளில் ஆம்லெட் போட்டு விற்கிறார்கள், அரசு முற்றிலுமாக சீரழிந்து விட்டது” என்று பேசினார்.