ராம்போ பட பாணியில் தன் குழந்தையை விட அதிக மதிப்பெண் எடுத்ததிற்காக சக மாணவனுக்கு விஷம் கொடுத்த கொடூரம்..!
காரைக்கால், நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பாலமணிகண்டன் (வயது 13), கோட்டுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் 2, 2022 அன்று பள்ளி ஆண்டு விழா ஒத்திகையில் கலந்துகொண்ட பாலமணிகண்டன், மதியம் வீட்டிற்குச் சென்றபோது, தன் தாயிடம் பள்ளி காவலாளி கொடுத்த குளிர்பானத்தைக் குடித்ததில் மயக்கமாக வருவதாகக் கூறியுள்ளான்.
சிறிது நேரத்தில் மாணவன் வாந்தி எடுத்ததால், பதறிப்போன தாய் மாலதி, அவனை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குப் பரிசோதித்ததில், பாலமணிகண்டன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பாலமணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து மாலதி அளித்த புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, பாலமணிகண்டனுடன் படிக்கும் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா (46) என்பவர், பள்ளி காவலாளியிடம் குளிர்பானத்தைக் கொடுத்து, அதனைப் பாலமணிகண்டனிடம் கொடுக்குமாறு கூறியது தெரியவந்தது.
விசாரணையில், தன் மகளைவிட பாலமணிகண்டன் படிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாகச் செயல்பட்டதால், அவன் மீது சகாயராணிக்கு பொறாமை இருந்துள்ளது தெரியவந்தது. இதனால், அவர் சயனைடு மற்றும் எலி மருந்தை குளிர்பானத்தில் கலந்து, அதனைப் பள்ளி காவலாளி மூலம் மாணவனிடம் குடிக்கக் கொடுத்துள்ளார். அதனை குடித்த மாணவன் உடல்நலக்குறைவால் இறந்தது விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி மோகன் தீர்ப்பளித்தார்.
மாணவன் கொலையில் சகாயராணி விக்டோரியா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


