மதுரை முன்னாள் எம்.பி., ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனாவால் காலமானார்!!

 
ags

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனாவால் காலமானார். அவருக்கு வயது 60.

கடந்த 1960 ஆம் ஆண்டு பிறந்த ராம்பாபு காங்கிரஸ் கட்சியை பின்புலமாக கொண்ட அரசியல்  குடும்பத்தை சேர்ந்தவர்.  இவரது தந்தை ஏஜி சுப்புராமன் காங்கிரஸ் சார்பில் 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு,  வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். குறிப்பாக 1984ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவை எதிர்த்து வெற்றி பெற்றார்.

rambabu

இதைத்தொடர்ந்து ராம்பாபு 1989, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பிலும்,  1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக  தேர்வு  செய்யப்பட்டார். ராம்பாபு மற்றும் அவரது தந்தை  ஏஜி சுப்புராமன் இருவரும் தொடர்ச்சியாக ஐந்து முறை மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளனர். கடந்த 1998ஆம் ஆண்டு சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக போட்டியிட்ட இவர் தோல்வியை தழுவினார் . அதன்பிறகு ராம்பாபு தேர்தலில் போட்டியிடவில்லை

ram

இந்நிலையில் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா  இருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி   அவர் உயிரிழந்தார். ராம்பாபு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.