வயநாட்டு மக்களை ராகுல் காந்தி ஏமாற்றிவிட்டார்: தமிழிசை சவுந்தரராஜன்!

 
1
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உண்மையில் ராகுல் காந்தி வயநாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலின்போது வயநாடு தொகுதியில் போட்டியிட்ட அவர், வேறொரு தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டுள்ளதை மறைத்துவிட்டார். வயநாடு மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு ராகுல் காந்திக்கு வாக்களித்தார்கள். ஆனால், அவர் வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் தகுதியுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் அங்கு உள்ள போதிலும், பிரியங்கா காந்தியை கட்சி நிறுத்துகிறது. இதன் மூலம் அக்கட்சி வாரிசு அரசியல்தான் செய்கிறது என்பது தெளிவாகிறது.

பாஜக இளம் பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியுள்ளது. அவர் அந்த மண்ணின் மகள். சமீபத்தில் வயநாடு மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராகுல் காந்தி என்ன செய்தார்? பிரியங்கா காந்தியின் பங்களிப்புதான் என்ன? இதுபற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு மக்கள் முடிவெடுப்பார்கள்” என தெரிவித்தார்.

இந்து மதம் தொடர்பாக தான் பேசிய பேச்சு திரிக்கப்பட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், “அவர் கலந்து கொண்ட மாநாட்டின் பெயர் சனாதன ஒழிப்பு மாநாடு. டெங்கு, மலேரியாவைப் போல சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றே அவர் பேசி இருக்கிறார். அவர் என்ன பேசினார் என்பது பதிவாகி உள்ளது. அவர் பேசியது திரிக்கப்பட்டதாக எவ்வாறு கூற முடியும்?

சதி ஒழிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றின் பெருமை பெரியாரையும் அண்ணாவையுமே சாரும் என்றும் அவர்கள் பேசியதையே தான் பேசியதாகவும் உதயநிதி கூறி இருக்கிறார். சதி ஒழிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றத்துக்கான ஒட்டுமொத்த பெருமையையும் பெரியாருக்கும் அண்ணாவுக்குமே கொடுத்துவிட முடியாது. ஏராளமான தலைவர்கள் அதற்காக போராடி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் போராடுவதற்கு முன்பே பலர் போராடி இருக்கிறார்கள்.

சனாதன தர்மம் குறித்து தவறான பிரச்சாரத்தை உதயநிதி மேற்கொண்டுள்ளார். சனாதன தர்மம் பாகுபாடு காட்டக்கூடியது, எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களுக்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது என்றெல்லாம் அவர் தவறாக பேசி உள்ளார். சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்க்கை முறை. தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் தமிழர்களும் சனாதன தர்மத்தை பின்பற்றுகிறார்கள். சனாதன கலாச்சாரத்துக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கில் உதயநிதி இவ்வாறு பேசுகிறார். இது கண்டிக்கத்தக்கது. உதயநிதி பேசிய விதம் ஆணவமானது. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறுவதன் மூலம் அவர் நமது நீதி முறைக்கே சவால் விடுகிறார்” என தெரிவித்தார்.