6 - 10 வகுப்புகளுக்கு இன்று காலாண்டுத்தேர்வு தொடக்கம்..
தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு இன்று(செப்.20) தொடங்குகிறது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலேயே கல்வியாண்டு நாட்காட்டி வெளியிடப்படும். வழக்கமாக 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் வேலைநாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அண்மையில் அதனை 210 ஆக குறைத்து திருத்தப்பட்ட நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது.
பள்ளிக்கல்வித்துறை நாட்காட்டியின்படி, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 11, 12 பயிலும் மாணவர்களுக்கான தேர்வு நேற்று முதல் தொடங்கிய நிலையில்,6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து செப். 28 முதல்அக். 2 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட உள்ளது. மீண்டும் அக்டோபர் 3ம்தேதி ( வியாழக்கிழமை) பள்ளிகள் தொடங்கிறது.