2026 தேர்தல்தான் இலக்கு, நிச்சயம் ஆட்சியில் அமர்வோம்- புஸ்ஸி ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு 2026, அப்போது நாம் கண்டிப்பாக ஆட்சியில் அமர்வோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்றும் நிகழ்வு பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குட்டி.கோபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மயிலாடுதுறை சேந்தங்குடியில் 30 அடி உயர கொடியை புஸ்ஸி ஆனந்த் ஏற்றினார்.ஆனந்துக்கு கட்சியினர் செங்கோலை பரிசாக வழங்கினர். முன்னதாக அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வுகளில் கட்சியினர் 300-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “தமிழக வெற்றி கழகத்தின் இலக்கு 2026. அப்போது நாம் கண்டிப்பாக ஆட்சியில் அமர்வோம். இதற்காக நாம் அனைவரும் ஜாதி, மதத்தை கடந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.