மாணவர்கள் வாயில் செல்லோடேப் ஒட்டி தண்டனை? வீடியோ எடுத்த ஆசிரியை
வகுப்பில் பேசிக்கொண்டே இருந்ததால் 4-ம் வகுப்பு மாணவர்கள் வாயில் பள்ளி தலைமை ஆசிரியை செல்லோ டேப் ஒட்டியதாக புகார் கூறிய நிலையில், சக மாணவன் தான் செல்லோ டேப்பை ஒட்டியதாகவும், அதை மறுபடியும் 3-ம் வகுப்பு ஆசிரியை தான் எங்கள் வாயில் செல்லோ டேப்பை ஒட்டி போட்டோ எடுத்தததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பேச்சு வைரலாகிறது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கனிஷ் வர்மா, நிதிஷ், கவின், ரோஷன், சஷ்மிதா ஆகியோர் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியை, இந்த 5 மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டி இரண்டு மணி நேரமாக வகுப்பறையில் உட்கார வைத்து உள்ளதாக பெற்றோர்கள் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த நிலையில் தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் தலைமையில் பள்ளியில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் அறிக்கை இன்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் மாணவி சஷ்மிதா வாயிலும் டேப் ஒட்டப்பட்டதாக கூறும் நிலையில், அதற்கு மாணவி தலைமை ஆசிரியர் வாயில் டேப் ஒட்டவில்லை என கூறியுள்ளார். மற்றொரு மாணவன் ராகவன் தான் வாயில் டேப் ஓட்டினான் என்றும், மூன்றாம் வகுப்பு ஆசிரியை தான் அதனை புகைப்படம் எடுத்ததாகவும் அந்த மாணவி கூறியுள்ளார்.