வேங்கைவயலுக்கு சென்ற விசிகவினர் தடுத்துநிறுத்தம்

 
ச்

வேங்கைவயல் கிராமத்திற்குள் செல்ல முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர்களை எல்லையிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டியலின மக்களை சந்திக்க சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பார்வேந்தன் உள்ளிட்ட வழக்கறிஞர்களை அந்த கிராமத்திற்குள் செல்லக்கூடாது என அந்த கிராமத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் வழக்கறிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வழக்கறிஞர்களிடம் பேசிய டிஎஸ்பி அப்துல் ரகுமான், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே வேங்கைவயல் கிராமத்திற்குள் அனுமதிக்க முடியும் என்றும் இல்லையென்றால் தங்களால் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்ததால் பின்னர் வெள்ளனுர் காவல் நிலையம் வந்த வழக்கறிஞர்கள் காவல்துறையினிரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் தெரிவித்து விளக்கம் கேட்போம் என கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.