"ஹோட்டலில் ரகளை; பீர் பாட்டிலால் தாக்குதல்" - 'டாடி' ஆறுமுகத்தின் மகனை தேடும் போலீஸ்!

 
டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரை அனைவரும் டாடி ஆறுமுகம் என்றே அழைப்பார்கள். பிரபல யூடியூப் சமையல் கலைஞரான இவர் village food factory என்ற சானலை நடத்தி வருகிறார். நெட்டிசன்களிடம் இவரது சானல் மிகவும் பிரபலம். 46 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் டாடி ஆறுமுகத்தின் சானலை பின்தொடர்ந்து வருகின்றனர். இவருக்கு கோபிநாத் என்ற மகன் உள்ளார். டாடி ஆறுமுகத்தின் சானலை கவனித்து வருவதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத்

இச்சூழலில் டாடி ஆறுமுகத்தின் மகனும் அவரது நண்பர்கள் மூவரும் புதுச்சேரி முத்தியால்பேட்டைக்குச் சென்றுள்ளனர். நேற்றிரவு 10 மணியளவில் அங்குள்ள தனியார் ஹோட்டலில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அந்த ஹோட்டலில் இரவு 11 மணிக்கு மேல் மது வழங்கப்பட மாட்டாது. ஆனால் இவர்கள் 11.20 மணிக்கு ஹோட்டல் ஊழியர்களிடம் மது கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர்கள் மறுக்கவே அவர்களிடம் நால்வரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊழியர்களை அசிங்கமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

Cassava CHIPS !!! Prepared by my daddy Arumugam / Village food factory -  YouTube

மேலும் கோபிநாத் அங்கிருந்த பீர் பாட்டிலை கொண்டு ஊழியர் ஜார்ஜ் என்பவரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் ரகளையில் ஈடுபட்ட அவர்கள், ஹோட்டலிலுள்ள பொருட்களையும் சூறையாடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து ஹோட்டலுக்கு வந்த போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய முயன்றுள்ளனர். அப்போது அவர்களைத் தாக்கிவிட்டு கோபிநாத்தும் இன்னொரு நபரும் தப்பித்து ஓடியுள்ளனர். இருப்பினும் மேலும் இருவரைக் கைது செய்து போலீஸார் அழைத்துச் சென்றனர். தலைமறைவாகியுள்ள இருவரை தேடி வருகின்றனர்.