ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சபரிமலை கோவிலில் சாமி தரிசனம்..!

 
1 1

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அக்.21 முதல் அக்.24 ஆம் தேதி வரையில் 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக, கேரள மாநிலத்துக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், அக்.22 ஆம் தேதி சபரிமலை கோயிலில் தரிசனம் செய்கின்றார். இதனைத் தொடர்ந்து, அக்.23 ஆம் தேதி கேரள ஆளுநர் மாளிகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் சிலையை அவர் திறந்து வைக்கின்றார். மேலும், கோட்டயத்தில் உள்ள செயிண்ட் தாமஸ் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கின்றார்.பின்னர், அக்.24 ஆம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள செயிண்ட் தெரசா கல்லூரியின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலையில் கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். பிறகு சாலை மார்க்கமாக கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர், இரவில் அங்கு ஓய்வெடுத்தார். சபரிமலை கோவிலில் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்மு அய்யப்பனை தரிசனம் செய்கிறார்.


இதற்காக இன்று காலை 9.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு பம்பையை சென்றடைகிறார். பிறகு பம்பையில் கணபதி கோவிலில் அவருக்கு இருமுடி கட்டும் சடங்கு நடக்கிறது.

இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சிறப்பு வாகனத்தில் அழைத்து செல்லப்படுகிறார். மதியம் 11.55 மணி முதல் 12.25 வரை சன்னிதானத்தில் அய்யப்பனை ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.