2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்- பிரேமலதா உறுதி
2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் மக்களை தேடி மக்கள் தலைவர் நிகழ்ச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெரியார் சிலை பகுதியில் இருந்து ரோட் ஷோவாக அழைத்து வரப்பட்டார். அப்போது பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “காரைக்குடி பகுதி விருந்தோம்பலில் சிறந்தவர்கள். படப்பிடிப்பு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு தலைவர் விஜயகாந்துடன் பல முறை வந்துள்ளேன். வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைப்போம். தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்
2026 தேர்தல் இதுவரை இல்லாத வகையில் கூட்டணி ஆட்சியாக கூட்டணியில் பங்கு பெறும் அனைவரும் ஆட்சியில் பங்கு கொள்ளும் வகையில் இருக்கும். SIR திருத்தத்தில் உங்கள் வாக்குகளை உறுதிபடுத்தி கொள்ளுங்கள், பல்வேறு திருட்டுக்களை போல வாக்குகளை திருட வருகிறார்கள். உங்கள் வாக்குகள் மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினரின் வாக்குகளையும் உறுதி படுத்தி கொள்ளுங்கள். ஜனவரி 9ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது” என்றார்.


