ரயில் மோதி கர்ப்பிணி உள்பட இருவர் பலி.. வேலை தேடி சென்னை வந்தபோது நேர்ந்த சோகம்..

 
 ரயில் மோதி கர்ப்பிணி உள்பட இருவர் பலி..  வேலை தேடி சென்னை வந்தபோது நேர்ந்த சோகம்..  

 
பொத்தேரி அருகே 4 மாத கர்ப்பிணி பெண் உட்பட இருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து வேலைதேடி சென்னை வந்தபோது விபத்து நேர்ந்துள்ளது. 

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா (28) மற்றும் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷரீப் (35) ஆகிய இருவரும் வேலை தேடி சென்னை வந்துள்ளனர்.  அப்போது கூடுவாஞ்சேரி அருகே உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன், வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பர் வீட்டிற்கு செல்வதற்காக  பொத்தேரி- கூடுவாஞ்சேரிக்கு இடையே சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில்வே தண்டவாளம் வழியே பேசியப்படி நடந்து சென்றுள்ளனர். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த மின்சார ரயிலில் அடிபட்டு, இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.  

train

இதில்  தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பலத்த காயம் ஏற்பட்டு, விபத்து நடந்த சில நிமிடங்களில், முகமது ஷரீஃப் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். அங்கு  தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ஐஸ்வர்யா,  சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்‌. இந்நிலையில் உயிரிழந்த ஐஸ்வர்யா நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.  இந்த விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து,  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக  விபத்து ஏற்பட்டதா ? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.