பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

 
காக்கா தோப்பு பாலாஜி

 சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

காக்கா தோப்பு பாலாஜி 5 கொலை வழக்குகள் உள்பட 59 குற்றவழக்குகளில் தொடர்புடைய  சரித்திரபதிவேடு குற்றவாளி ஆவார். அத்துடன் 12 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்றிருக்கிறார்.  இவர் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி ரவுடி சம்போ செந்திலின், எதிராளி ஆவார். ரவுடி சம்போ செந்திலும்,  காக்கா தோப்பி பாலாஜியும் எதிரெதிர் கேங்ஸ்டர்கள் என கூறப்படுகிறது.  

காக்கா தோப்பு பாலாஜி

இந்நிலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்வதற்காக கொடுங்கையூர் போலீஸார்,  வியாசர்பாடி P&T குடியிருப்பு பகுதிக்குச் சென்றனர்.  அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு காக்கா தோப்பு பாலாஜி தப்பியோட முயன்றதால், தற்காப்புக்காக  போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.  இன்று  காலை 04.50 மணி அளவில் கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் என்கவுன்ட்டர் செய்தார். 

பின்னர் காலை, 05.22 மணிக்கு  அவர்  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட போது,  அவர் வழியில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததால் உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து  காலை 06.22 மணியளவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ஸ்டான்லி மருத்துவமனை பிணவறையில் இருந்து,  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.