பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு! 10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்!
பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் டிக்கெட் விற்று தீர்ந்தது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. தாம்பரம் - நாகர்கோவில், தாம்பரம்-நெல்லை உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் டிக்கெட் விற்று தீர்ந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு சில நிமிடங்களிலேயே நிறைவு பெற்றது. தட்கல் முறையில் டிக்கெட் பெறுவதற்கு முனைப்பு காட்டும் பயணிகள் நாளை பயணம் செய்ய இன்று காலை 10 மணிக்கு தட்கலில் முன்பதிவு செய்தனர். பயணிகள் வசதிக்காக கூடுதலாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை முதல் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.