ரயிலில் இருந்து கீழே விழுந்து கிடந்த காவலர் : மர்ம நபர்கள் தள்ளிவிட்டதாக புகார்..!

 
1

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (29), மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயிலில் சொந்த ஊருக்குப் புறப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை விருதுநகர் அருகே பட்டம்புதூர் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே பலத்த காயத்துடன் காவலர் ஜெயக்குமார் விழுந்து கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீஸார், ஜெயக்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விசாரணையில், ரயிலில் வந்த போது நள்ளிரவில் மர்ம நபர்கள் தன்னைத் தாக்கி தனது செல்போனை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் காவலர் ஜெயக்குமாரின் பேக் மற்றும் அதற்குள் இருந்த செல்போன் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் ரயில்வே போலீஸாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. காவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள புகார் குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.