விநாயகர் சிலை எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு... ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

 
அஃப்

ஆண்டிபட்டியில் விநாயகர் சிலைகளை வழிபாடுகளுக்காக கொடுத்தனுப்புவதில் காவல்துறையினர் தங்களை மட்டும் மிகவும் அலைக்கழித்ததாக குற்றஞ்சாட்டி இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படும் நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில்  இந்து மக்கள் கட்சி,  இந்து முன்னணி மற்றும் விஷ்வ ஹிந்து பர்ஷத் அமைப்புகள் சார்பில் 103 சிலைகள் வைக்கப்பட்டு சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த சிலைகளில் ரசாயனம் கலக்கப்பட்டதாக  தேனி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புகாரையடுத்து, சிலைகளை வழிபாடுகளுக்கு எடுத்து செல்ல ஆண்டிப்பட்டி காவல்துறை இன்று மாலை தடை விதித்தது. இதனால் விநாயகர் சிலைகளை பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு எடுத்து செல்வதில் தாமதம் ஏற்படவே இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் சிலைகளை எடுத்து செல்ல காவல்துறை அனுமதி வழங்கியது.

ஜக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி வைகைசாலை பிரிவு பகுதிகளில் இருந்த விநாயகர் சிலைகள் 3 அமைப்பினரிடம் தனித்தனியே வழங்கப்பட்டது. ஒவ்வொரு அமைப்பினரும் தனித்தனியே சிலைகளை பெற்று கொண்டு சென்ற நிலையில் இந்து மக்கள் கட்சி அமைப்பினர் தங்களை மட்டும் காவல்துறையினர் மிகவும் அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டி, திடீரென  முத்துகிருஷ்ணாபுரம் விலக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆண்டிப்பட்டி வைகைஅணை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைடுத்து காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து  இந்து மக்கள் கட்சியினரும் விநாயகர் சிலைகளை கிராமப்புறங்கள், நகர் பகுதிகளில் வைத்து வழிபட சென்றனர்