“வெடிகுண்டு வீசுவேன்” என பேசிய சீமான் மீது போலீசில் புகார்

 
seeman

ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் வெடிகுண்டு வீசுவதாக வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமானை கைது செய்ய கோரி பெரியார், அம்பேத்கர் கூட்டமைப்பினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு அளித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று  பவானிசாலை நெரிக்கல் மேட்டில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் பொது பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு, என் தலைவன் பிரபாகரன் கொடுத்த வெடிகுண்டை நான் வீசுகிறேன், புதைக்கும் இடம் கூட புல் பூண்டு முளைக்காமல் போய்விடும் என பேசி இருந்தார். மேலும் என் தலைவன் உமிழ்ந்திருக்கின்ற நெருப்புத் துகள்கள்தான் இங்கே அமர்ந்து கொண்டிருப்பவர்கள் பத்த வைத்தால் எரித்து விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள் என்றும் இனவெறி கொள்ளுங்கள் இல்லையென்றால் நீங்கள் ஆளப்படுவீர்கள் என்றும் பேசி இருந்தார். ஏற்கனவே தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசியதால் சீமானுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சீமான் தனது அரசியல் ஆதாயத்திற்காக ஈரோட்டில் ஒரு வன்முறை நிகழ வேண்டும் என திட்டமிட்டு பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி சாதி மத இன மோதலை ஏற்படுத்தவும்,  பொது அமைதியை சீர்குலைத்து மக்களின் ஒற்றுமையை கெடுக்கும் நோக்கத்திலும்  பேசியதாக பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இது தொடர்பாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து புகார் மனு அளித்த அவர்கள், சீமானின் பேச்சு பொது மக்களின் நலனுக்கு உகந்ததல்ல என்றும் சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவரின் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்யவும் அவரை கைது செய்யவும் வலியுறுத்தினர்...


இதே போல்,  சீமான் தன்னிடம் இருப்பதாக கூறும் வெடிகுண்டை  உடனடியாக பறிமுதல் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி  ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சீமான், பிரபாகரன் வழங்கிய வெடிகுண்டு தன்னிடம் இருப்பதாகவும் வெங்காயத்தை வீசுங்கள் வெடிகுண்டை வீசுகிறேன் என பேசி இருந்தார். இது வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், அவர் தன்னிடம் இருப்பதாக கூறும் வெடிகுண்டை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும், வன்முறையை தூண்டும் வகையில் பேசக்கூடிய அவருக்கு ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர்.