இன்ஸ்டா ரீல்சால் இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்
காயல்பட்டினத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அரிவாள் மற்றும் வாளுடன் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தில் சில தினங்களாக அரிவாள் மற்றும் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் எடிட் செய்து வாட்ஸ் அப், இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற வலைதளங்களில் இரண்டு வாலிபர்கள் ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் சில தினங்களாக வைரலாக அப்பகுதியில் பரவிவந்தது. இதனையடுத்து ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சேக் அப்துல் காதர் தலைமையில் எஸ்.ஐ. வாசுதேவன் மற்றும் போலீசார் சமூக வலைதளங்களின் பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த மீராஷா மரைக்காயர் மகன் சேகுநூர்தீன்(24), சுனாமி காலனியை சேர்ந்த சகாப்தீன் மகன் முத்து மொகுதூம் என்ற ஆசிஃப் அலி(19), ஆகிய இருவர் என்பது தெரியவந்தது.
சிறுவர்கள், இளைஞர்கள் இதுபோன்று ரீல்ஸ் செய்து பலர் சிறையில் தள்ளப்படுகின்றனர். ரீல்ஸ் மோகத்தால் உங்களது வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். காயல்பட்டினத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாள் வைத்து ரீல்ஸ் எடுத்து 2 வாலிபர்களை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர் pic.twitter.com/gtgx3IaPpX
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) September 23, 2024
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து அரிவாள், வாள், மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், தங்களை பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், ரவுடியாக வலம் வரவேண்டும் என்பதற்கும் சமூகவலைதளங்களில் ரவுடியாக டிரெண்டிங் ஆவதற்கும் இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். சேகுநூர்தீன் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இரண்டு அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.