“9, 10, 11 வகுப்புகளுக்கு பள்ளிகளை நடத்துவது தேவையற்றது” : ராமதாஸ்

 

“9, 10, 11 வகுப்புகளுக்கு பள்ளிகளை நடத்துவது தேவையற்றது” : ராமதாஸ்

கொரோனா அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பு விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று அனைத்துத் தரப்பினரும் நிம்மதி பெருமூச்சு விட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் மீண்டும் மிக வேகமாக பரவத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

“9, 10, 11 வகுப்புகளுக்கு பள்ளிகளை நடத்துவது தேவையற்றது” : ராமதாஸ்

தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6500 என்ற உச்சத்தை எட்டிய கொரோனா பரவல் பாதிப்புகள் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளாலும், பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் உறுதியாக கடைபிடித்து வந்ததாலும் கடந்த 6 மாதங்களாக படிப்படியாக குறைந்து வந்தன. இம்மாதத் தொடக்கத்தில் சுமார் 450 என்ற அளவுக்கு குறைந்த தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 836 என்ற அளவை எட்டியிருக்கிறது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த இரு வாரங்களில் 171 என்ற எண்ணிக்கையிலிருந்து 317 என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இது அச்சமும், கவலையும் அளிக்கும் புள்ளிவிவரமாகும்.

பொருளாதார நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், அதை கொரோனா பரவல் ஓய்ந்து விட்டதாகக் கருதிக் கொண்டு பொதுமக்கள் அலட்சியமாக நடந்து கொண்டது தான் இந்த நிலைக்கு காரணமாகும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களில் 10 விழுக்காட்டினர் கூட முகக்கவசம் அணிவது, கையுறைகளை அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் உண்மையாகும். சென்னை உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் நடமாடுபவர்கள், பேருந்துகளில் பயணிப்பவர்களில் பெரும்பான்மையினர் முகக்கவசம் அணிவதில்லை என்பதைப் பார்க்க முடிகிறது. வணிக வளாகங்கள், சந்தைகள் ஆகியவற்றிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான் காணப்படுகிறது. இது மிகவும் தவறாகும்.

“9, 10, 11 வகுப்புகளுக்கு பள்ளிகளை நடத்துவது தேவையற்றது” : ராமதாஸ்

கொரோனா வைரஸ் பரவல் ஓய்ந்து விட்டதாக மக்கள் தங்களுக்குத் தாங்களே நினைத்துக் கொள்வதும், வீட்டை விட்டு வெளியில் வரும் போது முகக்கவசம் அணிவதை கவுரவக் குறைவாகவும், வசதி குறைவாகவும் நினைப்பது தான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதற்கு காரணமாகும். கொரோனா வைரஸ் பரவலை உடனடியாகக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வீசுவதை தடுக்க முடியாது என மருத்துவ வல்லுனர்கள் கூறியிருப்பதைக் கருத்தில் கொண்டு மக்கள் அக்கறையுடனும், பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் ஓயவில்லை; நாம் பாதுகாப்பு விதிகளை மதித்து செயல்படா விட்டால் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசும்; அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மக்கள் உணர வேண்டும். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெளியில் வரும் போது முகக்கவசம் அணிவது, கையுறைகளை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை நன்றாக கழுவுவது, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வு பரப்புரைகளை தமிழக அரசு பொது ஊடகங்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

“9, 10, 11 வகுப்புகளுக்கு பள்ளிகளை நடத்துவது தேவையற்றது” : ராமதாஸ்

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாகத் தான் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரவுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களின் பெற்றோர்களில் 5 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களில் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்கள் மூலம் நோய்ப்பரவும் சூழலில் அவற்றை தற்காலிகமாக மூடுவது தான் சரியானதாக இருக்கும். தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு தவிர்த்து மீதமுள்ள அனைத்து வகுப்புகளின் மாணவர்களும் தேர்ச்சி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 9, 10, 11 ஆகிய வகுப்புகளின் மாணவர்களுக்கு பள்ளிகளை நடத்துவது தேவையற்றதாகும். எனவே, 12 ஆம் வகுப்பு தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கும் மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதில்லை. எனவே, இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வயது வரம்பின்றி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.