பெண்கள் நினைத்தால் பாமக ஆட்சி அமையும்- ராமதாஸ்

சேலம் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், சேலம் மாவட்ட பாட்டாளி சொந்தங்களுடன் சந்திப்புக் கூட்டம் பாமக சார்பில் நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளரும், மேற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான இரா.அருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், மாநிலத்தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கையில் பெண்கள் தான் மெஜாரிட்டியாக உள்ளனர். ஆண்கள் மைனாரிட்டியாக தான் உள்ளனர். எனவே, பெண்கள் நினைத்தால் மாற்றம் கொண்டு வர முடியும். ஒரு பைசா செலவில்லாத கல்வியை பாமக கொடுக்கும் என தொடர்ந்து சொல்லி வருகிறோம். அதாவது கட்டாயக் கல்வி, கட்டணமில்லா படிப்பு, சுமையில்லா படிப்பு, சுகமான படிப்பு என்பதெல்லாம் பாமகவின் கொள்கையாகும். பாமக வைத்திருப்பது போல் பிற கட்சிகளும் திட்டங்களை வைத்திருக்கலாம், ஆனால், அவற்றுடன் ஒப்பிடுகையில் பாமக திட்டங்கள் உயர்ந்தவையாகும்.
பாமக என்பது ஒரு சமுதாயத்திற்கானது அல்ல, அனைத்து சமுதயாத்திற்குமானது, அனைத்து சமயத்தினருக்குமானது. பெண்கள், இளைஞர்கள் நினைத்தால் தமிழ்நாட்டில் பாமக ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் மது மற்றும் போதைப் பொருட்களை எங்கும் விற்பனை செய்யக் கூடாது. மது, போதைப் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே பாமகவின் நோக்கம். மூன்று மாதம் நாங்கள் சொல்வதை அரசு பின்பற்றினால் போதைப் பொருட்களை ஒழிக்க முடியும். சாராயத்தை ஒழித்துவிட்டால் வருவாய்க்கான மாற்று வழி என்ன என்பதை பாமக புத்தகமாகவே வெளியிட்டிருக்கிறது. ஆனால் எல்லா சமுதாயத்தினரும் எங்களை தவறாக பார்க்கின்றனர். பாமக அனைவருக்காகவும் பாடுபடும், அதில் வஞ்சனையோ, ஏற்றத்தாழ்வோ இருக்காது. பெண்களிடம் ஆக்கும் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி என மூன்று சக்திகளும் உள்ளது. எனவே, பெண்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வர முடியும்” என்றார்.