கன்னியாகுமரியில் அணு கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டம்- அன்புமணி ராமதாஸ்
அணு கனிம சுரங்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்க மத்திய அரசு முயல்கிறது. இதனால் மோசமான சூழல் உருவாகி புற்றுநோய் உட்பட பல பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதால் தமழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், “தமிழக தென் மாவட்டங்களில் பல பிரச்சினைகளும் கனிம வள கடத்தலும் அரசியல் பெரும் புள்ளிகளால் நடத்தப்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களுக்கு, முதலமைச்சருக்கும் யார் கடத்துகிறார்கள் என்பது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது திராவிட மாடல். அணு கனிம சுரங்கம் அமைக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் பகுதியில் அமைக்க மத்திய அரசு முயல்கிறது. இதனால் மோசமான சூழல் உருவாகி புற்றுநோய் உட்பட பல பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதால் தமழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கம் உட்பட எவ்வித சுரங்கமும் வேண்டாம். தமிழகத்தில் கேரளாவில் இருந்து பல ஆண்டுகளாக மருத்துவ கழிவுகள், கோழிப்பண்ணை கழிவு, பன்றி கழிவு போன்றவை குமரி, தென்காசி உட்பட தமிழக எல்லை பகுதிகளில் கொட்டி செல்கிறார்கள். எல்லை பகுதிகளில் அமைந்துள்ள சோதனை சாவடிகள் எதற்கு?
கச்சத்தீவு விவகாரத்தில் தி முக., காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் துரோகம் செய்து விட்டார்கள். மோடி அரசு அதை மீட்க முயற்சித்து வருகிறது. காவிரியில குண்டாறு அணை திட்டம் அவசியமாக செய்யவேண்டும். வரும் காலங்களில் வானிலை மாற்றம் இன்னும் மோசமாக இருக்கும் என்பதால் அதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை வேண்டும். இந்தியாவில் அதிக சிறு தொழிலாக கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் எந்த தெருவிலும் கிடைக்கும் சிறு தொழிலாக கஞ்சா விற்பனை மாறியுள்ளது. தமிழ்நாடு பெயரை கஞ்சா மாநிலமாக பெயர் மாற்றம் செய்யலாம். காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு மோசமான நிலைக்கு சென்று வருகிறது.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய கூறினால், அதில் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் கூறி வருகிறார். தெலுங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை துவங்கி வைத்தவர் ராகுல் காந்தி, மற்ற மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்து உள்ளனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் அதிகாரம் இல்லை என்பது தவறானது. அம்பேத்கர் தேசிய தலைவர், அவர் எங்கள் கொள்கை வழிகாட்டி. அம்பேத்கர், தந்தைபெரியார், காரல்மார்க்ஸ் மூன்று பேரும் எங்கள் கொள்கை தலைவர். அப்படிபட்ட தலைவரை விமர்சனம் செய்யக்கூடாது. இது யார் செய்தாலும் தவறு. மேலும் நியாய விலை கடைகளில் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரிசி டன் கணக்கில் கடத்தப்படுகிறது. இதற்கு சிபி.ஐ.,விசாரணை அமைக்க வேண்டும். இது கேரளா, ஆந்திர, கர்நாடகாவில் கடத்தப்படுகிறது. இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும்” என தெரிவித்தார்.