திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பே கிடையாதா?- அன்புமணி ராமதாஸ்

 
இந்த அறிவிப்புகளை உடனே வெளியிட வேண்டும் - முதல்வருக்கு ரெக்வஸ்ட் வைத்த  அன்புமணி...

போதை மருந்து வணிகத்தை எதிர்த்த  குத்துச்சண்டை வீரர் டிஜிபி அலுவலகம் அருகில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பே கிடையாதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு  தெரிவித்து வந்த குத்துச்சண்டை வீரர் ஒருவர்  போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு மிக அருகில் நடந்துள்ள இந்த படுகொலை தான் தமிழகத்தில்  குறிப்பாக சென்னையில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான தனுஷ் குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார். அதே பகுதியில்  மோகன் என்பவர் கஞ்சா, போதை ஊசிகள், போதை மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்து வந்திருக்கிறார். அதற்கு தனுஷ்  எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அவரை மோகனும் இன்னொருவரும் சேர்ந்து படுகொலை செய்திருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்கு காரணம் காவல்துறையின் அலட்சியம் தான்.

கொலை நடந்த ஐஸ் அவுஸ் பகுதி  காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு மிக அருகில் உள்ளது. அந்தப் பகுதியிலேயே நீண்ட காலமாக கஞ்சா விற்பனை நடந்து வந்திருக்கிறது.  காவல்துறை உண்மையாகவே செயல்திறன் மிக்கதாக இருந்திருந்தால் கஞ்சா விற்பனையை  தடுத்தி நிறுத்தியிருப்பதுடன், அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும். அதை செய்திருந்தால்  தனுஷ் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.  தனுஷுக்கும், மோகனுக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்த் வந்த நிலையில், தனுஷை மோகன் கும்பல் படுகொலை செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை உளவுத்துறை மூலம் தமிழக அரசு கண்டுபிடித்து தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதில் தமிழக அரசு படுதோல்வியடைந்து விட்டது.

‘ராமதாஸ்க்கு வேறு வேலையில்லை’ எனக்கூறிய மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்- அன்புமணி 

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தான் காரணமாக இருக்கிறது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாமக பலமுறை வலியுறுத்தினாலும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால், அப்பாவி மக்கள்  பாதுகாப்பாக நடமாட முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது.  மக்கள் நலனில் அரசுக்கும், காவல்துறைக்கும் ஓரளவாவது அக்கறை இருந்தால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.