தே.மு.தி.க அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு - தடையை மீறி பேரணி!

 
dmdk

தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற்று வரும் அமைதி பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி தேமுதிகவினர் பேரணி மேற்கொண்டு வருகின்றனர். 

தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாக அறிவித்து இருந்தார். அதன்படி கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல தே.மு.தி.க திட்டமிட்டிருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக தொண்டகர்கள் குவிந்த நிலையில், இதனால் சென்னை கோயம்பேடு பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக தே.மு.தி.கவின் அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. 

இந்த நிலையில், காவல்துறையினரின் தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி மேற்கொண்டு வருகின்றனர். அமைதி பேரணிக்கு அனுமதி கோரி மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாருடன் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அமைதி பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தடையையும் மீறி தேமுதிகவினர் அமைதி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.