"அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" - ஓபிஎஸ் ஆவேசம்!

 
ஓபிஎஸ்

சமீப நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களால் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. கோவை மாணவி ஒருவர் கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, முதல்வர் மீரா ஜாக்சன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்னும் இருவர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தின் சுவடே இன்னும் மறையவில்லை.

ரூ.500 கோடி ஊழல் புகார்: ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவா? | Bhoomitoday

அதற்குள் கரூர் மாணவி ஒருவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாலியல் சீண்டல்களால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாகவே இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன்னை யார் பாலியல் துன்புறுத்தினார்கள் என்பதைக் கூறுவதற்கு பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்கொலை செய்யும்போது கூட குற்றவாளியை அடையாளம் காட்ட முடியாமல் தவித்த அந்த மாணவி, உயிருடன் இருக்கும்போது எத்தனை கொடுமைகளையும் வேதனைகளையும் அனுபவித்திருப்பார் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.


இதனால் மன வேதனையடைந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், பாலியல் துன்புறுத்தலால் இறக்கும் கடைசி பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ள செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.