மது விலக்கு என்று சொல்லி கொண்டு மது வளர்ப்பினை ஊக்குவிப்பதா? - ஓபிஎஸ் கண்டனம்!
மது விலக்கு என்று சொல்லிக் கொண்டு மது வளர்ப்பினை ஊக்குவிக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவைக் கெடுத்து, அமைதியைக் குலைத்து, தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் அளவற்ற தீமைகளை ஏற்படுத்தும் மதுவை ஒழிப்பதற்குப் பதிலாக மது வளர்ப்பினை ஊக்குவிக்கும் அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. மது விலக்குத் துறையை மது வளர்ப்புத் துறையாக மாற்றிய பெருமை தி.மு.க.வையே சாரும். பூரண மதுவிலக்கு என்ற வாக்குறுதியை அளித்த தி.மு.க., தற்போது பூரண மது வளர்ப்புக் கொள்கையை பின்பற்றி வருகிறது. மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது, மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைப்பது, மதுக்கூடங்களை அறவே ஒழிப்பது ஆகியவை பூரண மதுவிலக்கினை நடைமுறைப்படுத்துவதற்கான படிக்கட்டுகள். ஆனால், தி.மு.க. அரசோ இதற்கு முற்றிலும் முரணான வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு பக்கத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்கிறோம் என்று சொல்லிவிட்டு, மறுபுறம் புதிது புதிதாக மதுக்கடைகளை திறப்பதை ஊக்குவிக்கிறது. இது போதாது என்று மதுக் கூடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதேபோன்று, மதுக் கடைகள் நண்பகல் 12-00 மணி முதல் இரவு 10-00 மணி வரை இயங்கும் என்று அறிவித்துவிட்டு, இரவு 10-00 மணிக்கு மேல் நண்பகல் 12-00 மணி வரை மதுக் கூடங்களில் மதுவை கூடுதல் விலைக்கு விற்பனையை செய்ய அனுமதித்துள்ளது. உதாரணத்திற்கு, பூந்தமல்லி சுற்றுப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இரவில் மூடியபின், அந்த மதுக் கடைகளை ஒட்டியுள்ள மதுக் கூடங்களில் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், குடிமகன்களுக்கு தேவைப்படும் குடிநீர், பழங்கள், ஊறுகாய் போன்றவை இலவசமாக வழங்கப்படுவதாகவும், காவல் துறையினர் இவற்றை கண்டு கொள்வதில்லை என்றும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்த நிலைமைதான் தமிழ்நாடு முழுவதும் நிலவுகிறது. இதன்மூலம் தி.மு.க.வினர் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், 24 மணி நேர மது சேவையின் மூலம் பொதுமக்களுக்கு விஷத்தை அளித்து வருகிறது தி.மு.க. அரசு.
ஆட்சியின் மூலம் மக்களுக்கு சேவையினை வழங்காமல், மது விற்பனையின் மூலம் தனது வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளும் பணியினை தி.மு.க. மேற்கொண்டு வருகிறது. மது விலக்கு என்று சொல்லிக் கொண்டு மது வளர்ப்பினை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறம் என்றால் மறுபுறம் போதை பொருட்கள் விற்பனை தமிழ்நாடு முழுவதும் கொடிகட்டி பறக்கிறது. இதனை தி.மு.க. அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காததன் காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. "கள்ளுண்போன் நஞ்சுண்பான்” என்பதைப் புரிந்து கொண்டு, குடியை ஒழிப்பதன் மூலம் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதைக் கருத்தில் கொண்டு, குடியை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.