அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா? - ஓபிஎஸ் கண்டனம்
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றும் அளவுக்கு நிதி நிலைமையை சீரழித்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது மனித வளம்தான். மனிதவள மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றுவது கல்வி. கல்வியில் மேம்பட்ட சமுதாயத்தால்தான் வளர்ச்சிக் குறியீடுகளை எளிதாக அடைய இயலும். எனவேதான், கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி, அதற்கான ஆசிரியர் பணியிடங்களையும் உருவாக்கினார் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். புதிதாக அரசுப் பள்ளிகளை உருவாக்கியப் பெருமையும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு உண்டு. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கல்விக்காக காசு செலவழிக்கத் தேவையில்லை என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியையே ஏற்படுத்தியவர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
ஆனால், கடந்த மூன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், உட்கட்டமைப்பு வசதியின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமை, பள்ளிகள் இடிந்து விழும் நிலைமை ஆகியவற்றின் காரணமாக கல்வித் தரம் வெகுவாக குறைந்துள்ளது. "அடுத்த கல்வியாண்டில் 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, அந்தப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பேசியிருப்பது. தமிழ்நாடு கல்வியில் பின்தங்கி உள்ளது என்பதை நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளது. 2024-2025 ஆம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் 44,042 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்ற திட்டமும் அடங்கும். இந்தப் பணத்தை தி.மு.க. அரசு என்ன செய்தது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். ஒருவேளை இந்த நிதி வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டு விட்டதோ என்று மக்கள் நினைக்கிறார்கள்.
மறைந்த தி.மு.க. தலைவருக்கு மணிமண்டபம் அமைத்தல், 137 அடி உயரத்திற்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைத்தல் போன்றவற்றிற்கு மக்கள் பணத்தை வீணாகச் செலவழிக்கின்ற தி.மு.க. அரசு, 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியினை தனியாரிடம் ஒப்படைப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு வரிகள், கட்டணங்கள் மக்கள்மீது திணிக்கப்பட்டு அதன்மூலம் ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசு வருமானத்தை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு பொருட்கள் மற்றும் சேவை வரி மூலம் 10,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகவும், பத்திரப் பதிவு மூலம் 2,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அரசு கூறுகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிக்காக தனியாரிடம் மன்றாடுவது என்பது வெட்கக்கேடானது. இது, அரசுப் பள்ளிகளை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைத்துவிடும் நடவடிக்கையாகும். அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டில் தனியாரை ஈடுபடுத்துவது என்பது அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதற்குச் சமம். மொத்தத்தில், தி.மு.க. அரசின் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில், கல்வியில் தமிழ்நாடு பின்தங்கி இருக்கிறது என்பது தெளிவாகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மனித வாழ்க்கை வளம் பெறுவதற்கும், சமுதாய மேம்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குவது வற்றாத செல்வமாம் கல்வி என்பதை உணராத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. “கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு முரணாக போதை நாடாக தமிழ்நாடு மாறிக் கொண்டிருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இந்த நிலைமைக்குக் காரணம் தி.மு.க. அரசின் மோசமான செயல்பாடு, நிர்வாகத் திறமையின்மை, மெத்தனப் போக்கு ஆகியவை என்று சொன்னால் அது மிகையாகாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுதை உடனடியாக தடுத்து நிறுத்தவும், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அரசே போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.