பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்துக- ஓபிஎஸ்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னமும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை, சில மாதங்களுக்கு முன் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான
கொள்கை முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளது.
இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது கிணற்றில் கல்லைப் போட்டது போல அசையாமல் உள்ளது என்றும், இந்த நிலையில்தான் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி, 25 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு பெறும் முன் கடைசி 12 மாதங்களில் பெற்ற சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியம் அளிக்கப்படும் என்றும், அதற்கு குறைவாக பணியாற்றிவர்களுக்கு, பணிக் காலத்திற்கேற்ப ஒய்வூதியம் வழங்கப்படும் என்றும், ஓய்வூதியம் பெறுவோர் காலமானா பின் அவர் பெற்ற ஊதியத்தில் 60 சதவிகிதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தினை மாநில அரசுகளும் செயல்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதன்மூலம் 90 லட்சம் அரசு ஊழியர்கள் இந்தியா முழுவதும் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், “இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது தங்களுடைய பெரும்பாலான கோரிக்கைகளை பூர்த்தி செய்துள்ளதாக கூட்டு ஆலோசனை அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.