ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையில் சாத்தியமற்றது - வைகோ!

 
1

சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்காக புதிய புதிய திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வருகிறார். மற்ற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார். மத்திய அரசு செய்ய வேண்டிய உதவியை இதுவரை செய்யவில்லை. நாம் கேட்டதில் 5 சதவீதம் நிதியைத்தான் மத்திய அரசு தந்து உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகளை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்குகிறது. இதனால் எதிர்காலம் விபரீதமாக மாறி விடும் என்ற அச்சம் உள்ளது.

இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மோசமான திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்த நினைக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையில் சாத்தியமற்றது. பல தேசியங்களை கொண்ட உபகண்டம்தான் இந்தியா. மோடியின் மனதில் அதிபர் ஆக வேண்டும் என்ற எண்ணம் புதைந்து கிடைக்கிறது. ரஷ்யாவை போல அமெரிக்காவை போல தான் அதிபராக வேண்டும் என்று மோடி விரும்புகிறார். பாஜக கூட்டணி என்று பெயர்தான் உள்ளது. ஆனால் மோடி, கூட்டணி கூட்டத்தை இதுவரை கூட்டவே இல்லை. ஆனால் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மாதம் ஒரு முறை கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டுவார். இந்தியாவுக்கு பேராபத்து உள்ளது என்றால் அது இந்த மோடி அரசால் தான் உள்ளது. இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் கேள்விக்குறியாகி உள்ளது.

குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து இந்து ராஷ்டிரியத்தை உருவாக்கி அதில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் வைத்து விடுவார்கள். இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற தான் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர பார்க்கிறார்கள். திமுகவின் முயற்சியால்தான் விவசாயிகள், நெசவாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40 இடங்களில் திமுக தான் வெற்றி பெற்றது. அடுத்து முறையும் இதே நிலைமை தான் வரும். 400 இடங்களில் வருவோம் என்று சுற்றிச் சுற்றி வந்த மோடிக்கு 250 தான் கிடைத்தது. எதிர்காலத்தில் இந்த 250 கூட மோடிக்கு வராது. 2026 ஆம் ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

மேலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வைகோ, “நான் இருக்கும் வரை திமுக ஆட்சியை அகற்ற விட மாட்டேன். பாஜகவால் ஒருபோதும் இங்கு காலூன்ற முடியாது. அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படியாக இருந்தது” என்று கூறினார்.