ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி..!

 
1

உலகம் முழுவதும் ‘எம் – பாக்ஸ்’ எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக, அண்மையில் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குரங்கம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி வைரஸ், நாட்டில் முதன்முறையாக கேரள மாநிலம் மலப்புரத்தில் 38 வயதான ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பிற்குள்ளான நபர் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பியவர் என்றும், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பாதிப்பிற்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் நடைபெற்ற சோதனையில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்தியாவில் குரங்கம்மையின் 2வது பாதிப்பு இது என்றும், உலகளவில் புழக்கத்தில் உள்ள புதிய வகையான வைரசுடன் கண்டறியப்பட்ட முதல் பாதிப்பு என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1-பி வைரஸ் மிகவும் தீவிரமானதாக அறியப்படுவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்தியாவில் இந்நோய் பெரிய அளவில் பரவும் அபாயம் குறைவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க மாநிலங்கள் முழுமையாக தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

முன்னதாக ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய அரியானாவின் ஹிசார் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞருக்கு, கடந்த வாரம் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர், டெல்லி லோக் நாயக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.