அக்.6 மெரினாவில் விமான சாகச கண்காட்சி - பொதுமக்கல் இலவசமாக காணலாம்..

 
அக்.6 மெரினாவில் விமான சாகச கண்காட்சி - பொதுமக்கல் இலவசமாக காணலாம்.. 

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு அக்டோபர் 6ம் தேதி,  சென்னையில் மிகப்பிரம்மாண்டமான விமான வானசாகசக் காட்சி  நடைபெறவுள்ளது.  

இந்திய விமானப்படை, அதன் 92வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 11 மணிமுதல் சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய விமான வானசாகசக்காட்சி நிகழ்த்தவுள்ளது. இக்கொண்டாட்டத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "இந்திய விமானப்படை - சக்ஷம், சஷக்த், ஆத்மநிர்பர்" என்பதாகும். நாட்டின் வான்வெளியைப் பாதுகாப்பதில் இந்திய விமானப்படையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது.

மெரினா கடற்கரையில் பார்வையாளர்கள் அன்றைய தினம் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளை காணலாம். அன்று இந்திய விமானப்படையின் வகைவகையான 72 விமானங்கள் காண்போரை கவர்ந்திழுக்கும் ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபடும். விமானக் கண்காட்சியில், வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கைடைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை தங்களது வான்கலைகளால் மக்களை பரவசத்தில் ஆழ்த்தும். 

அக்.6 மெரினாவில் விமான சாகச கண்காட்சி - பொதுமக்கல் இலவசமாக காணலாம்.. 

மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய பெருமைவாய்ந்த பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்துவகை விமானங்களும் விதவிதமான அணிவகுப்பில் ஈடுபடும்.  

அக்டோபர் 6, 2024 அன்று, மெரினா கடற்கரையில் நிகழும் இந்த விமான சாகசக்கண்காட்சியை அனைவரும் இலவசமாக பார்வையிடலாம். இதற்கு பதிவுசெய்ய அவசியமில்லை. இந்த நிகழ்வானது பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.  இது இந்தியவிமானப் படையின் வலிமையையும், திறன்களையும், நாட்டின் வான்பரப்பை பாதுகாப்பதில் அதன் ஈடுபாடடையும் பிரதிபலிக்கும்.  

இதுபோன்ற வானசாகசக்காட்சி கடந்த ஆண்டில் விமானப்படை தினமான அக்டோபர் 08, 2023 அன்று பிரயாக்ராஜில் உள்ள சங்கம் பகுதியில் நடத்தப்பட்டது, இது லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. இம்முறை சென்னையில் சுமார் 15 லட்சம் பேர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.