ஹோட்டலுக்கு சத்துணவு முட்டைகளை விற்ற சத்துணவு அமைப்பாளர் கைது

 
முட்டை

துறையூரில் உள்ள உணவகத்திற்கு அரசு சத்துணவு முட்டைகளை விற்ற விவகாரத்தில் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி மற்றும் ஹோட்டல் கடை உரிமையாளர் ரத்தினம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில்  சுமார் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் குழந்தைகள் காப்பகம் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள்ஆகியவை ஏங்கி வருகிறது இங்கு  தினசரி மதிய உணவிற்காக தமிழக அரசு சார்பில் லட்சக்கணக்கான முட்டைகள் இலவசமாக பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் வங்கி அருகே  ரத்னா என்ற பெயரில்  பிரபல தனியார் உணவகம் தேநீர் கடையுடன் இயங்கி வருகிறது. அந்த உணவகத்தில் தமிழக அரசின் முத்திரை இட்ட சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் ரூபாய் இரண்டுக்கு கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் ரூபாய் 15க்கு மேல் ஆம்லேட் உள்பட பல்வேறு விதமான முட்டை உணவுகள் விற்கப்பட்டு வந்துள்ளது.

இந்த உணவகத்திற்கு அங்கன்வாடி மையத்தில் இருந்து  முட்டை, பாமாயில், அரிசி, பருப்பு உள்பட அனைத்து பொருட்களை அந்த தனியார் உணவகத்திற்கு தினந்தோறும் விற்பனை செய்யபட்டும் வந்துள்ளது. இந்நிலையில் ஓட்டல் கடையில் அட்டை அட்டையாக சத்துணவு முட்டைகள் அடுக்கி வைத்திருப்பதை பார்த்த பொதுமக்கள் சமூக அலுவலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி உணவகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் உணவு பாதுகாப்புத் துறையினர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கடை உரிமையாளர் இரத்தினத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி முட்டைகளை ரூபாய் 2க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச முட்டை வழங்கி வரும் நிலையில் அதனை சத்துணவு அமைப்பாளர் விற்பனை செய்து காசு பார்த்த சம்பவமும் அதனைத் தொடர்ந்து கைது படலமும் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.