மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும்: நிர்பயா தாயார்..!
ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் 31 வயது மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை கொல்லப்பட்ட விவகாரத்தில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்களை வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாகவும் இக்கொலை சம்பவத்தில் மருத்துவமனைக்கு உள்ளேயும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி நிலைமையை கையாள தவறிவிட்டார் எனவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "மம்தா பானர்ஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றஞ்சாட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். இந்தப் பிரச்னையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப மம்தா பானர்ஜி போராட்டம் நடத்துகிறார். மாநில முதல்வர் என்ற பொறுப்பை பயன்படுத்தி குற்றஞ்சாட்டவர்கள் மீது அவர் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சூழ்நிலையை கையாள தவறியதால் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்.கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஒரு பெண்ணுக்கு எதிராக இதுபோன்ற காட்டுமிராண்டித்தனம் நடந்துள்ளது என்றால், நாட்டின் பிற பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.