சைபர் கிரைமில் பணத்தை இழந்துட்டீங்களா? புகாரளிக்க புதிய நடைமுறை அறிமுகம்
சென்னையில் சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்தால் 1930 மூலம் தேசிய சைபர் க்ரைம் ரிப்போர்ட்டிங் போர்டலில் புகார் அளித்து பெறப்படும் எண் மூலமாகவே பறிகொடுத்த பணம் மீட்பது தொடர்பான வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை மேற்கொள்ள கூடிய நடைமுறையை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
சென்னையில் ஜனவரி முதல் ஆகஸ்ட் 2024 வரை மொத்தம் 1679 வழக்குகள் சைபர் குற்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 1589 வழக்குகள் நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்கள் ஆகும். இவற்றில் பல்வேறு மோசடிகளில் சுமார் ரூ.189 கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவை ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி, Digital Arrest-fed Ex/ கூரியர்/TRAI மோசடி, ஸ்கைப் மோசடிகள், ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி திருமண மோசடி, EB BILL மோசடி,பரிசு மோசடி போன்றவை அடங்கும். அதிகரித்து வரும் நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்களுக்குத் தீர்வாக, சென்னை காவல் ஆணையர் அருண் தொடர்பான சைபர் குற்றங்களின் விசாரணை அதிகாரிகளுக்கு ஒரு வழிமுறையை வெளியிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சைபர் கிரைம் மோசடியில் பணத்தை இழந்தால் பணத்தை இழந்த வங்கி வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் தெரிவித்து பணத்தை முடக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் பொழுது,அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என வங்கி நிர்வாகம் தரப்பில் வற்புறுத்தி வந்தனர். இதனால் சைபர் கிரைமில் பணம் இழந்தவர்கள், 24 மணி நேரத்தில் புகார் அளித்தாலும் வங்கியில் முடக்கும் நடவடிக்கை என்பது தாமதமாகி மோசடி கும்பல் இடமிருந்து பணத்தை முடக்கி மீட்க முடியாத நிலையே இருந்தது. இதை தவிர்க்கும் வகையில் எந்தவொரு நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றத்தில் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், முதலில் தேசிய சைபர் குற்றங்களை புகாரளிக்கும் தளமான NCRP (National Cyber Crime Reporting Portal) மூலம் குற்றத்தை பதிவு செய்ய வேண்டும். இதற்கு சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். NCRP இல் பதிவு செய்யப்பட்டு கிடைக்கும் பதிவு எண் வாயிலாக குற்றத்தில் ஈடுபட்ட சந்தேகத்திற்கிடமான வங்கி கணக்குகளை முடக்கம் செய்யும் செயல்முறையை தொடங்குகிறது.
ஒரு சைபர் குற்றத்தில் பாதிக்கப்பட்டவர் NCRP இல் பதிவு செய்வது கட்டாயம் ஆகும். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தனது நீதிமன்ற சுற்றறிக்கையில், சைபர் குற்றங்களில் இழந்த பணத்தை மீட்டெடுக்க FIR இன்றி NCRP பதிவின் அடிப்படையில் மற்றும் சைபர் குற்ற போலீசார் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பணத்தை மீட்கும் வழிமுறையை தெரிவித்துள்ளனர். நிதி இழப்பு சைபர் குற்றங்களில் பணத்தை இழந்தவர்கள் NCRP இல் பதிவு செய்து, பிறகு தங்கள் எல்லைக்கு உட்பட்ட சைபர் குற்ற போலீஸ் நிலையத்தை அணுகி, சந்தேகத்திற்கிடமான/ முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் தங்களது பணம் முடக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். NCRP பதிவு எண் மற்றும் சைபர் போலீசாரின் அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளியின் வங்கிக் கணக்குகளில் முடக்கப்பட்ட தொகைகளை பெறுவதற்காக தங்கள் எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் சட்ட பிரிவு 503 BNSS ன் படி மனு தாக்கல் செய்யலாம்.
சென்னை காவல் ஆணையர் சைபர் குற்றங்களின் விசாரணை அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள வழிமுறையில் (Standard Operating Procedure -SOP) சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டு எடுக்கும் வழிமுறைகள், சைபர் கிரைம் குற்றங்களை உடனடியாக புகார் அளிப்பது மற்றும் நிதி இழப்பு சம்மந்தமான சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை கூடிய விரைவில் மீட்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சென்னை காவல் ஆணையர் அருண் பொதுமக்கள் இவ்வகையான அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்கள், போலியான முதலீட்டு செயலிகள், வலைதளங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ,அறியாத வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்த வேண்டாம் என்றும் சைபர் குற்றங்களுக்கான ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.