தீபாவளி கொண்டாட்டத்தை சிதைத்த புதிய பட்டாசு..!

 
1 1

 தீபாவளி பண்டிகை கடந்த 20ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மத்திய பிரதேசத்தில் பல்வேறு புதிய ரக பட்டாசுகள் உள்ளூர் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.அந்த வகையில், 'கார்பைடு துப்பாக்கி' எனப்படும், 'பிளாஸ்டிக் பைப்'பினால், கார்பைடு உலோக கலவையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வெடியும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது, 150 - 200 ரூபாய் வரை விற்கப்பட்டதால், ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
 

துப்பாக்கி வடிவில் இருந்ததால், குழந்தைகளும் பெரிதும் விரும்பினர். ஒரு சிலர், சமூக வலைதளங்களை பார்த்து சொந்தமாகவே இந்த துப்பாக்கியை தயாரித்தனர்.
 

இந்நிலையில், இதை பயன்படுத்திய சிறுவர் - சிறுமியர், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட பலரின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு முகத்தில் காயங்களும் ஏற்பட்டன.அதிர்ச்சி கடந்த மூன்று நாட்களில் மட்டும், மத்திய பிரதேசம் முழுதும் கண் பார்வை பாதிக்கப்பட்டதாக, 125 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 14 குழந்தைகளின் பார்வைத்திறன் முற்றிலும் பறிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பாதிக்கப்பட்டவர்கள் போபால், இந்துார், ஜபல்பூர், குவாலியரில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும், 8 - 14 வயது வரையிலான குழந்தைகளே, கார்பைடு துப்பாக்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

இவர்களில் பெரும்பாலனோர், விதிஷா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

போபாலின் ஹமீதியா மருத்துவமனையில் மட்டும், 72 மணி நேரத்தில், 26 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், 20 - 30 சதவீதத்தினரின் கண்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.