நீட் மறுதேர்வு மைய நகரங்கள் விவரம் வெளியீடு; தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு..!
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு அவசியம். தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி இந்த தேர்வு மே 3ம் தேதி நாடு ழுழுவதும் நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் கசிவு, முறைகேடு போன்ற புகார்கள் காரணமாக அன்றைய தினம் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறு தேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடக்கிறது. மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வுக்கான மைய நகரங்கள் பற்றிய முன் அறிவிப்பு விவரத்தை (Advance Intimation Slip) தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. neet.nta.nic.inஎன்ற இணையதள முகவரி மூலம் தேர்வு மையங்கள் அமைந்துள்ள நகரங்கள் விவரத்தை அறிந்து கொள்ளலாம். தேர்வு மைய நகரங்கள் எந்த ஊரில் இருக்கிறது, எங்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்ற விவரங்களை கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றி அறிந்து கொள்ளலாம்.
* https://neet.nta.nic.in/ என்ற தேசிய தேர்வு முகமையின் இணையதள முகவரிக்குள் செல்லவும்.
* முகப்பில் தெரியும் Examination City Intimation slip for NEET (UG) - 2026 என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
* மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு குறியீடு உள்ளிட்ட விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
* மேற்கண்ட தகவல்களை உள்ளீடு செய்த பின்னர், திரையில் தேர்வு மைய நகரங்களின் விவரங்கள் அடங்கிய சீட்டு தெரியும். அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள இந்த விவரங்கள் அனைத்து தேர்வு மையங்கள் எங்கு அமைய பெற்றுள்ளது என்ற தகவல்கள் மட்டுமே. தற்போது வெளியாகி இருப்பது தேர்வுக்கூட அனுமதி சீட்டு (Hall Ticket) கிடையாது. தேர்வு மைய நகரம் எங்கு உள்ளது என்பதையும், பயண விவரங்களையும் முன்பே திட்டமிட்டு கொள்ளவே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேர்வு மைய நகரங்கள் பற்றிய விவரங்களை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011 - 40759000, 011 - 69227700 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. nta.ac.inஎன்ற மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தி உதவிகளை பெறலாம்.

