தேசிய விருதுகளை வென்று குவித்த ‘பொன்னியின் செல்வன்’

 
ச் ச்

சிறந்த பின்னணி இசைக்கான விருதை பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் பெற்றார்.  

டெல்லியில் 2022 ஆம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. விருதுகளை வென்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதன்படி சிறந்த பின்னணி இசைக்கான விருதை ஏ.ஆர்.ரகுமான் ’பொன்னியின் செல்வன்’ படத்துக்காக பெற்றுக் கொண்டார். தமிழில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனன் பெற்றார். இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார்.

சிறந்த தமிழ் படத்துக்கான விருது பொன்னியன் செல்வன் 1 படத்திற்கு வழங்கப்பட்டது. விருதை இயக்குநர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார். மேலும் இப்படம் சிறந்த பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு உள்ளிட்ட 4 விருதுகளை தட்டி சென்றது. சிறந்த நடிகருக்கான விருது காந்தாரா படத்திற்காக ரிஷப் ஷெட்டிக்கு வழங்கப்பட்டது.


தமிழில் இருந்து தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் (பொன்னியின் செல்வன் 1), இயக்குனர் மணிரத்னம் (பொன்னியின் செல்வன் 1), ஏஆர் ரஹ்மான் (பின்னணி இசை), நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்), சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம்), ரவி வர்மா (பொன்னியின் செல்வன்-1), ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன்-1), அன்பறிவு (கேஜிஎப்) உள்ளிட்டோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.


விருது வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் மணிரத்னம், “சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை பொன்னியின் செல்வன் படத்திற்காக வென்றேன். பொன்னியின் செல்வன் தமிழில் எழுதப்பட்ட மிகப் பெரிய கிளாசிக், அது மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் விரும்பப்படும் தமிழ் இலக்கியமாகும். இதை படமாக எடுக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.


சிறந்த நடிகைக்கான விருது வென்ற நித்யா மேனன், “2022 ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றது மிகச் சிறப்பானதாக உள்ளது. கலைஞர்களாகிய எங்கள் வாழ்வில் இது மிக முக்கியமான தருணம்.. இந்த விருதை திருச்சிற்றம்பலம் படத்தின் குழுவிற்கும், சக நடிகர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்றார்.