தேசிய விருது பெற்ற திரைக்கலைஞர்கள் - சீமான் வாழ்த்து..
தேசிய விருது பெற்ற திரைக்கலைஞர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ ஏ.ஆர்.ரஹ்மான் : பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னத இசை அமைத்ததற்காக, இந்திய ஒன்றிய அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினை பேரன்பிற்குரிய சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் வென்றுள்ள செய்தியறிந்து மிகுந்த மனமகிழ்வும், பெருமிதமும் அடைந்தேன்! ஏ.ஆர்.ரகுமானின் இசை மகுடத்தில், இந்திய அளவிலான விருதெனும் வைரம் 7வது முறையாகப் பதிக்கப்பட்டுள்ளது என்ற வரலாற்றுத் தனிச்சிறப்பு ஒவ்வொரு தமிழரையும் பெருமை கொள்ளச்செய்கிறது. இசையால் நீங்களும், உங்களால் இனமும் என்றென்றும் பெரும்புகழ் பெற்றிட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
இரவிவர்மன் : திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட என் ஆருயிர் இளவல் இரவிவர்மன் அவர்கள் பொன்னியின் செல்வன்-1 படத்தின் ஆகச்சிறந்த ஒளிப்பதிவுக்காக இந்திய ஒன்றிய அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை வென்றுள்ள செய்தி மிகுந்த பெருமிதமும், பேருவுவகையும் அளிக்கிறது. அன்புத்தம்பியின் வியக்க வைக்கும் கலைத்திறனை அருகிலிருந்து பார்த்து ரசித்துள்ளேன். அந்நியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் என தான் ஒளிப்பதிவு செய்த திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் காட்சியின் அழகியலை நம் கண்முன்னே கொண்டுவந்து நம்மைப் படத்தோடு ஒன்றச்செய்த திறன்மிக்கப் படைப்பாளி!
பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் கலைப்பார்வை கொண்டு உணர்வுப்பூர்வமாக அவர் தந்த ஒவ்வொரு காட்சியின் மூலமும் சோழர் காலத்திற்கே நம்மை இட்டுச்சென்றவர். காலந்தாழ்ந்து கிடைத்தபோதிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழித்திரைப்படங்களில் பல ஆண்டுகளாக மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன்பணியாற்றிய தம்பி ரவிவர்மனின் ஈடு இணையற்ற அயராத கடின உழைப்பிற்குக் கிடைத்த வெகுமதியாகவே இவ்விருதினைக் கருதுகிறேன். அன்புத்தம்பி ரவிவர்மன் அவர்கள் மக்களின் மனம்மகிழ, மென்மேலும் கலைத்தொண்டு புரிந்து சாதனை பல படைத்திட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
மணிரத்னம் - பொன்னியின் செல்வன்-1 : சிறந்த தமிழ்த்திரைப்படம், பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலியமைப்பு ஆகிய நான்கு பிரிவுகளில் இந்திய ஒன்றிய அரசின் விருதினை வென்றதன் மூலம் அதிக விருதுகளைக் குவித்துள்ள 'பொன்னியன் செல்வன்-1' திரைப்படத்தின் இயக்குநர் மதிப்பிற்குரிய ஐயா மணிரத்னம் உள்ளிட்ட இப்படத்தில் பணியாற்றிய நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
கே.ஜி.எஃப்-2 படத்திற்காகச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதினை இரண்டாவது முறையாக வென்றுள்ள அன்புத்தம்பிகள் அன்பறிவு (அன்புமணி - அறிவுமணி) இரட்டையர்களுக்கும், பொன்னியின் செல்வன்-1 படத்திற்காகச் சிறந்த ஒலியமைப்பிற்கான விருதினை வென்றுள்ள அன்புச்சகோதரர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், திருச்சிற்றம்பலம் படத்திற்காகச் சிறந்த நடிகை விருதினை வென்றுள்ள நடிகை நித்யாமேனன் அவர்களுக்கும், திருச்சிற்றம்பலம் படத்திற்காகச் சிறந்த நடன இயக்குநர் விருதினை வென்றுள்ள அன்புத்தம்பிகள் ஜானி மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோருக்கும், என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.