குப்பைத்தொட்டிகளான பூங்காக்களும், மைதானங்களும்! பாஜக கண்டனம்

 
சென்னை பூங்கா

இளைஞர்கள் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்த மைதானங்கள் குப்பைத்தொட்டிகளாக அலங்கோலமாக மாறி வருவதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இந்து பெண்களை இழிவுபடுத்தும் மனு? வார்த்தையை விட்ட நாராயணன்!  மாட்டிகிட்டீங்களே.. திருமா பக்கா மூவ்! | Narayanan Thirupathy accepts about  the problems of Manusmriti says ...

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “சென்னை முழுவதும் சாலைகளில் மழை நீர் வடிகால்வாய்கள், மின்சார துறை, போன்ற பல்வேறு துறைகள்  மேற்கொண்டு வரும் பணிகளையடுத்து தோண்டப்படும் பள்ளங்களில் அள்ளப்படும் மணல், கற்கள், குப்பை கூளங்கள் மற்றும் கற்கள், செடி கொடிகள், மரங்கள் போன்றவைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் குவித்து வருகின்றனர். 

இளைஞர்கள் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்த மைதானங்கள் குப்பைத்தொட்டிகளாக அலங்கோலமாக மாறி வருவது கொடூரம். அதே போன்று காலை மாலை வேளைகளில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, சீரான ஒட்டப்பயிற்சி போன்றவைகளை மேற்கொள்ளும் பொது மக்கள் பயன்படுத்தும் பூங்காக்கள் குப்பை மேடுகளாக உருமாற்றம் அடைந்து வருகிறது.  சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களில் அள்ளப்படும் மணல்,கற்களை மீண்டும் அதே இடங்களில் போட்டு குழிகளை மூட வேண்டுமே,அது வரை எங்கே கொட்டி வைப்பது என்ற கேள்வி எழுவது இயல்பு தான். ஆனால்,முன்கூட்டியே திட்டமிட்டு பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அவற்றை கொட்டுவதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்த பின்னர் முறையாக அவை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியது மாநகராட்சி அதிகாரிகளின் கடமை.

ஆனால்,ஒப்பந்ததாரர்களின் வசதிக்காக அவர்களோடு கூட்டணி அமைத்து கொண்டு பூங்காக்களையும், மைதானங்களையும், குப்பைத்தொட்டிகளாக்கி, பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்குவது முறையன்று. பல மாதங்கள் ஒரு துறை வேலைக்காக பள்ளம் வெட்டி பணியாற்றி பின் பள்ளத்தை மூடி விட்டு சென்ற பிறகு, மீண்டும் வேறு ஒரு துறை பணிக்காக பள்ளம் தோண்டி மேலும் மக்களை துன்பப்படுத்துவது நிர்வாக சீர்கேட்டின் வெளிப்பாடு. பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. மக்களுக்கு கேடு விளைவிக்கும் இந்த தகாத செயலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீதும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.