அனுமன் ஜெயந்தி விழா- நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை

 
ச்

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 1,00,008 வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி திங்கள் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். இந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஜெயந்தி விழாவான இன்று நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு  அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டது.  காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர்க்கு பின்னர் மஞ்சள்,சந்தனம்,பன்னீர்,தயிர்,பால்,தேன்,திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படவுள்ளது.

இதனையடுத்து பிற்பகல் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடக மாநில பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில் பிரகாரம் முழுவதும் 2 டன் எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.