திமுக ஆட்சியை அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி- சீமான்
பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியை படுகொலை, நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்... திமுக ஆட்சியை அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ரமணி அவர்கள் பட்டப்பகலில் பள்ளி வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அந்த செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் மீது கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் மனதைக் கொதிக்கச் செய்கிறது.
தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், அரசு மருத்துவர், அரசுப்பள்ளி ஆசிரியர், வழக்கறிஞர் என்று பட்டப்பகலில் அடுத்தடுத்து நிகழும் கொலைவெறித் தாக்குதல்கள் யாவும் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால், பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற கேள்வியை ஒவ்வொரு மக்களுக்குள்ளும் எழுப்புகிறது.
தமிழ்நாட்டில் சாதியத் தீண்டாமை கொடுமைகள், ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், அரசியல் தலைவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பட்டப்பகலில் நாள்தோறும் நிகழும் படுகொலைகள், பெருகி ஓடும் கள்ளச்சாராயம், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கம் என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப முடியாத கொடுஞ்சூழல் நிலவுகிறது. மக்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நாட்டினை திமுக அரசு மெல்ல மெல்ல மாற்றி வருகிறது. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாட்டின் காவல்துறை முற்றிலும் செயலிழந்த துறையாகிவிட்டது. இந்த கொடூர கொலைகள் நடைபெறும் ஆட்சிதான் எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியா? ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் யாவும் திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதே தமிழ்நாட்டில் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி என்பதையே உணர்த்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.