அதிமுக உண்ணாவிரத போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு..!

 
1
 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் ஜனநாயக கோரிக்கையை நிராகரித்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப்படுகொலையாகும். மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, ஜனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.