"மருமகள் என்னை கொன்னுடுவேன்னு மிரட்டி கொடுமை படுத்துறா.." மூதாட்டி புகார்

 
மூதாட்டி

தனது இடத்தை அபகரித்துக் கொண்டு துன்புறுத்தும் மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி திரிபுரசுந்தரி. இவருக்கு அதே கிராமத்தில் அவரது பெயரில் ஒரு மாடி வீடு மற்றும் நிலம் உள்ளது. இந்த வீடு மற்றும் நிலத்தை அவரது மகன் குமரேசன், மருமகள் சத்யா ஆகிய இருவரும் அபகரித்துக் கொண்டதுடன் மூதாட்டியையும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூதாட்டி திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 


இந்நிலையில் மகன் மற்றும் மருமகளால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவர்கள் தன்னிடம் இருந்து ஆக்கிரமித்துக் கொண்ட இடம் மற்றும் நிலத்தை மீட்டுத் தரவும் வலியுறுத்தி மூதாட்டி திரிபுரசுந்தரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கண்ணீர் மல்க வந்து  மனு அளித்தார். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, உடன் நடவடிக்கை எடுக்க சீர்காழி கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.