மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தாய் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக இரணியல் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். கூலி தொழிலாளியான இவரது மனைவி ஜெயராணி மற்றும் மகன், மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். மூத்த மகன் பெர்ஜின் ராஜேஷ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிற்கு சென்ற நிலையில், இளைய மகளுக்கு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். வெளிநாட்டில் இருக்கும் மகன் பெர்ஜின் ராஜேஷின் வருமானத்தை எதிர்பார்த்து மகள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட பால்ராஜ் மனைவி ஜெயராணி 3-சுய உதவி குழுவினரிடமும் வெளி நபர்களிடம் 10-பைசா வட்டிக்கும் பணத்தை கடன் வாங்கி திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் பெர்ஜின் ராஜேஷ் வேலை இழந்து சொந்த ஊர் திரும்பிய நிலையில், போதிய வருமானமில்லாததால் வாங்கிய பணத்திற்கு வட்டி செலுத்த முடியாமலும், சுய உதவிக்குழுவினரின் பணத்தை முறையாக திரும்ப செலுத்த முடியாமலும் ஜெயராணி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பத்து பைசா வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தையும் அசலையும் திரும்ப கேட்டு டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று சுய உதவிக் குழுவினரும் வீட்டை முற்றுகையிட்டு ஜெயராணியிடம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜெயராணிக்கும் சுய உதவி குழுவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயராணி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசாரும் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மன உளைசலுக்கு ஆளான ஜெயராணி நேற்றிரவு தென்னை மரத்தில் வண்டுகளை கட்டுப்படுத்த பயன்படும் விஷ மாத்திரைகளை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு கட்டிலில் கிடந்து தூங்கியுள்ளார். கட்டிலில் வாயில் நுரை தள்ளியபடி கிடந்த தாயை கண்டு அதிர்ச்சியடைந்த பெர்ஜின் ராஜேஷ் அவரை மீட்டு சிகிsசைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராணி இன்று உயிரிழந்த நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் ஜெயராணி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.